கலைஞரின் மகத்தான மருத்துவத் தொண்டு!

             கலைஞரின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பல்வேறு புதிய நலத் திட்டங்களை முன்னெடுத்துவருகிறது தமிழ்நாடு அரசு. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பின்படி சென்னை கிண்டி, கிங் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பதினைந்தே மாதங்களில் ரூ.230 கோடி மதிப்பீட்டில், 1000 படுக்கை வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இம்மருத்துவமனை 15.06.2023 அன்று திறக்கப்பட்டு ஏழை எளியோருக்கும் உயர்தரச் சிகிச்சை கிடைக்கும் வண்ணம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையில் பெரும் புரட்சிகளைக் கொண்டுவந்த கலைஞர் அவர்களின் பெயரினை இம்மருத்துவமனைக்குச் சூட்டியிருப்பது மிகவும் பொருத்தமானது.

             சுகாதாரத் துறையில் தமிழ்நாடு மிகுந்த தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட்டிருக்கிறது என்று அறிஞர்கள் பாராட்டுவதற்கும், பொது மருத்துவத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதற்கும் வித்திட்டவர் கலைஞர். தமிழர்களின் நலன் காக்க அவர் என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று பார்க்கலாம்.

             மருத்துவக் கட்டமைப்பு பலமாக இல்லாத சென்ற நூற்றாண்டில் சிசு மரணம் மிக மோசமான சமூக அவலமாகத் தொடர்ந்துவந்தது. இதைத் தடுப்பதற்கென வெவ்வேறு நடவடிக்கைகளை கலைஞர் முன்னெடுத்தார். சிசு மரணம் ஏற்படுவதற்கான மிக முக்கியமான காரணம் வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் வழக்கம்தான். இதற்கு எதிரான பிரச்சாரங்கள் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டது என்றாலும், வீட்டுக்கே சென்று பிரசவம் பார்க்கும் முடிவை அரசு எடுத்தது. இதற்காக, வீட்டுக்குச் சென்று பிரசவம் பார்க்கும் செவிலியருக்கு ஊக்கத்தொகை அறிவித்தார். அதாவது, ஒவ்வொரு பிரசவத்துக்கும் ஊக்கத்தொகை உண்டு. இதோடு, சிசு மரணம் ஏதும் ஏற்படாமல் சிறப்பாகக் கையாளும் செவிலியருக்கு ஒரு சவரன் தங்கம் பரிசு என்றும் அறிவித்தார். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தொடங்கி மாவட்ட ஆட்சியர் வரை சிறப்பாகச் செயல்பட்ட அனைவருக்கும் சுழல் கேடயம் வழங்கி ஊக்கப்படுத்தினார். பிறகு, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன் வழியாக, பெண்கள் ஊட்டச்சத்துமிக்க உணவு எடுத்துக்கொள்ளவும் உடல்நலனை மேம்படுத்திக்கொள்ளவும் நிதியுதவி அளித்தார். பெண்களும் குழந்தைகளும் இதனால் பயன்பெற்றனர்.

             தேசிய சுகாதாரக் குறியீடுகளில் இந்திய அளவில் தமிழ்நாடே முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. இன்று இந்தக் கட்டமைப்பின் பலனை ஒட்டுமொத்த தமிழ்நாடும் அனுபவித்துவருகிறது. குழந்தைகளுக்குச் சத்தான உணவுகளையும் ஊட்டச்சத்து மாத்திரைகளையும் வழங்குவது, கர்ப்பிணிப் பெண்களுக்கு முதன்மை சுகாதார உதவிகளைச் செய்வது, இளம்பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்குவது, 19 வயது வரை உள்ள வளரிளம் பெண்களின் வளர்ச்சியைக் கண்காணிப்பது, கருவுற்ற தாய்மார்களைப் பதிவுசெய்து அவர்களைத் தொடர்ந்து கவனித்துக்கொள்வது, பாலூட்டும் தாய்மார்களுக்கு இணை உணவு வழங்குவது, தாய்-சேய் நல அட்டைகள் வழங்குவது, பிரசவம் பார்ப்பது, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வது, பிறப்பையும் இறப்பையும் உடனடியாகப் பதிவுசெய்வது, அரசின் பல்வேறு திட்டங்களையும் மக்களிடம் கொண்டுசேர்ப்பது என ஆரம்ப சுகாதார நிலையங்களின் பணி மிகப் பெரியது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில்கூட நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல் மலைக்கிராமம் போன்ற பின்தங்கிய இடங்களிலும் நம் மருத்துவத் துறை சிறப்பாகச் செயல்பட்டதற்கு நம்முடைய கட்டமைப்பே காரணம். இதன் கட்டுமானத்தை வலுப்படுத்தியதில் கலைஞருக்குத் தனித்த இடம் உண்டு. கலைஞர் முதன்முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது இருந்த ஆரம்ப சுகாதாரங்களின் எண்ணிக்கை வெறும் 300 மட்டுமே. அதை ஆயிரக்கணக்கில் உயர்த்தினார் கலைஞர். இங்கெல்லாம் 24 மணிநேரமும் மருத்துவ உதவி கிடைக்கும்படி செய்தார்.

             பெரும்பாலான மாநிலங்களில் மருத்துவத் துறை என்ற கட்டமைப்பு மட்டும் இருந்துவரும் நிலையில் இங்கே மாவட்ட அளவில் தலைமை மருத்துவமனை, வட்ட அளவில் மருத்துவமனை, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் 24 மணி நேரமும் இயங்கும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமங்களை ஒருங்கிணைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமவாரியாகத் துணை சுகாதார நிலையங்கள் என அபாரமான மருத்துவ உட்கட்டமைப்பைத் தமிழ்நாட்டில் உருவாக்கினார். இன்று, பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டம் குறைந்த வருவாய் கொண்ட குடும்பத்தினருக்கு சுகாதாரக் காப்பீடு வழங்குகிறது. இந்தக் காப்பீட்டுத் திட்டத்தை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடுதான் முதல் இடம் பெற்றிருக்கிறது. இதற்குக் காரணம் நம்முடைய மகத்தான மருத்துவக் கட்டமைப்புதான்.

             பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டம் எனும் காப்பீட்டுத் திட்டம் 2018 ஆம் ஆண்டின் இறுதியில்தான் ஆரம்பிக்கப்பட்டது. இதை 10 ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. சிந்தித்தவர் கலைஞர். 2009 ஆம் ஆண்டில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கினார். இந்தத் திட்டத்தில் உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு ரூ.1 லட்சம் வரை காப்பீடு வழங்கப்பட்டது. 1 கோடி ஏழைக் குடும்பங்கள் உயிர் காக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை பெற உதவியது. இன்று, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாக இது புதிய பரிணாமம் பெற்றிருக்கிறது. இந்தத் திட்டத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1,090 சிகிச்சை முறைகளும், 8 தொடர் சிகிச்சை வழிமுறைகளும், 52 பரிசோதனை முறைகளும் அடக்கம். பச்சிளம் குழந்தைகளிலிருந்து முதியோர் வரை 1.37 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பயன்பெறத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்ட திட்டம் இது. இதற்காக, 800 அரசு மருத்துவமனைகளும், 900 தனியார் மருத்துவமனைகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின்படி ஆண்டுக்கு ரூ. 5 லட்சம்வரை கட்டணமின்றி, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும்.

             1973-ஆம் ஆண்டில் கலைஞர் அவர்கள் கண்ணொளித் திட்டம் கொண்டுவந்தார். கண் பிரச்சினைகளுக்குச் சிகிச்சை பெறுவது என்பது எளியவர்களைப் பொறுத்தவரை எட்டாக்கனியாகவே இருந்துவந்த காலத்தில், கட்டணம் ஏதுமின்றி ஏழை மக்கள் தங்களுடைய கண்பார்வைக் குறைபாடுகளுக்கு சிகிச்சை பெறும் வாய்ப்பை இந்தத் திட்டம் வழங்கியது. இதேபோல், முதன்முதலில் இலவசக் கண் சிகிச்சை முகாம் அமைத்துப் பல்லாயிரக்கணக்கானோர் பயன்பெறக் காரணமாக இருந்தவர் கலைஞர்தான். இந்த வழியில், பள்ளி மாணவர்களின் வளம் பேண வாழ்வொளித் திட்டம் வகுத்தார். இதன்படி 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டது.

             செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கு இந்தியாவிலேயே முதன்முறையாக Cochlear Implant அறுவை சிகிச்சைத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியவரும் கலைஞரே. லட்சங்களில் செலவுபிடிக்கும் இந்த சிகிச்சை ஆயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகளுக்கும் கிடைக்க வழிவகுத்தது; இத்திட்டத்தினை உலக சுகாதார நிறுவனமே வியந்து பாராட்டியது

             நிர்வாக வசதிக்காகப் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்படும்போது, அந்த மாவட்டங்களிலும் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளையும் தாலுகா அரசு மருத்துவமனைகளையும் அமைத்தார் கலைஞர். ஒன்றிய அரசுடன் இணைந்து கலைஞர் கொண்டுவந்த 108 ஆம்புலன்ஸ் திட்டம் ஒரு நல்வாய்ப்பாய் அமைந்தது. அவசர காலத்தில் லட்சக்கணக்கானவர்களுக்குப் பயன்படும் திட்டமாக இது மலர்ந்தது. மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற இலக்குடன் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க வழிவகுத்தார். இன்று அந்த இலக்கு எட்டப்பட்டு முன்மாதிரி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. சென்னை அரசுப் பொது மருத்துவமனைக்குப் புதிய கட்டடம் கட்டித்தந்தார். வருமுன் காப்போம் திட்டம், நலமான தமிழகம் திட்டம் என்பன போன்ற பல்வேறு நலத் திட்டங்கள் வழியாகப் பயன்பெற்றவர்கள் ஏராளம். மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் பணிபுரியும் இடங்களில் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தனிச்சட்டத்தையும் அவர் இயற்றினார். நோயுற்றவர்களின் நலன் மட்டுமின்றி அவர்களைக் காக்கும் மருத்துவர்களின் நலனையும் காத்திட்ட மனிதநேயப் பண்பாளர் கலைஞர்.

             எந்த நேரத்திலும் மருத்துவ உதவி என்ற உயரிய எண்ணம், சிகிச்சை பெற வேண்டி யாரும் தாங்கள் வாழும் இடத்திலிருந்து அதிக தூரம் பயணிக்கக் கூடாது என்ற அக்கறை, அதிகம் செலவு பிடிக்கக்கூடிய சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாமல் எளியவர்கள் யாரும் துவண்டுவிடக் கூடாது என்ற கரிசனம், நோய்நொடியற்ற வலுவான அடுத்த தலைமுறை உருவாக வேண்டும் என்ற கனவு இவை எல்லாம்தான் கலைஞர் கொண்டுவந்த மகத்தான நலத் திட்டங்கள் சொல்லும் செய்தி.

             இன்று அவரின் பெயரைத் தாங்கியிருக்கும் மருத்துவமனையோ எல்லாத் தரப்பினருக்கும் உயர்தர சிகிச்சை தருவதற்காக உருவாகியிருக்கிறது. இருதயவியல், நரம்பியல், புற்றுநோய், குடல் இரைப்பை, சிறுநீரகம், ரத்தநாளம், மூளை ரத்தநாளக் கதிரியல் உள்ளிட்ட 12 உயர் சிறப்புத் துறைகளையும் நவீன சிகிச்சை வசதிகளையும் கொண்ட கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, நம் மருத்துவத் தலைநகருக்கு சூட்டப்பட்ட மகத்தான மகுடம்!

             முரசொலி, 17 ஜூன் 2023